new1 new2 new3 new5 new6
66°
18°
°F | °C
Scattered Showers
Humidity: 94%
Thu
Rain
62 | 67
16 | 19
Fri
Mostly Cloudy
60 | 68
15 | 20
Thursday, August 17, 2017
Text Size
மனம்மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா:15:7

நம்பிக்கை குன்றியவனே

பொதுக்காலம் 19 ஆம் வாரம். நல்லதையே ஆண்டவர் அருள்வார். பேரன்பும் உண்மையும் நிறைவாழ்வும் உள்ளவர். இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றவர். நம்பிக்கையின் இறைவன் நாற்பது ஆண்டுகளாக பாலை நிலத்தினின் வழியாக இஸ்ரயேல் மக்களை இறைவாக்கினர் மோசேயின் தலைமையில் வழிநடத்தியவர். நமது விசுவாசத் தந்தையர்களும் இறைவனுடைய வார்த்தையை முழுமையாக நம்பியது மட்டும் அல்லாமல், அவருடைய வார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ்ந்து இறைவனுடைய அருள் பிரசன்னத்தில் பேறு பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு, உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே என்று  (நீதிமொழிகள் 3:5) காண்கின்றோம்.  கடந்து சென்ற நாட்களில் திருப்பலி இறைவாசகங்கள் விடுதலைப்பயணம், எண்ணிக்கை  நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரயேல் மக்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்ளாமல் அவ்வப்போது இறைவாக்கினர் மோசேயிடம் முனுமுனுக்கின்றார்கள். ஆனால் வாக்குமாறாத இறைவன் அவர்களை இறுதிமட்டும் அன்பு செய்து வழிநடத்துகின்றார். இன்றைய இறைவார்த்தைகளின் வழியாக இறைவன் இரண்டு விழுமியங்களை முன்வைக்கின்றார்.  ஒன்று இறைஉறவு, மற்றொன்று இறை நம்பிக்கை. இறைஉறவில் வளரும்போது அவருடைய  ஆழமான அன்பை நம்மால் உணரமுடியம். அதன்வழியாக நம்பிக்கை என்னும் பற்று வளர்கின்றது.

முதல் வாசகத்தில் இறைவன் இறைவாக்கினர் எலியாவிடம் கூறுகின்றார், மலைமேல் என் திருமுன் வந்து நில்: இதோ ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கின்றேன் என்கின்றார்.  உயர்ந்த ஓரேபு மலையின் மேல் இறைவாக்கினர் எலியா முன்பு  பேரும் சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகிய  மூன்று அடையாளங்களின் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். ஆனால் இறைவாக்கினர் எலியா ஆண்டவருடைய உடனிருப்பை அவரால் உணரமுடியவில்லை, ஆண்டவரும் அங்கு இருக்கவில்லை அதற்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலியில் ஆண்டவரை அவரால் உணரமுடிகின்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொள்கின்றார். அவர் இரண்டுமுறை ஆண்டவரிடம் கூறுகின்ற பதில் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்தைக் தொடக்கூடிய வார்த்தைகளாக அமைகின்றது, "படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகின்றேன். நாம் பயணிக்கின்ற இந்த அவசர உலகத்தில் படைகளின் இறைவனாகிய ஆண்டவரிடம் பேரார்வம் கொண்டுள்ளோமா என்று சிந்திப்போம்.  இன்று உயர்ந்த மலையாக  விளங்கும் நற்கருணைப் பேழையில் உயிருடன் வாழும் இம்மானுவேலாகிய இறைமகன் இயேசுகிறிஸ்துவோடு  உறவாட பேரார்வம் கொள்ள விரும்புகின்றோமா? சிந்திப்போம். அவருடைய அருள் பிரசன்னத்தின் வழியாக பெறுகின்ற கொடைகள் ஏராளம். சிறப்பாக திருப்பலியின் வேளையிலும், நற்கருணை ஆராதனை வேளையிலும் உயிருடன் பிரசன்னமாய் இருக்கின்ற நற்கருணை நதரை உளமாற போற்றிப் புகழ்வது மாபெறும் பாக்கியம். இறைமகன் இயேசு தன்னுடைய நற்செய்திப் பணிவாழ்வில்,  இறைஉறவுக்கு முதலிடம் கொடுத்ததை நான்கு நற்செய்தியாளர்களும் வலியுறுத்துவதைக் காண்கின்றோம். இரவு முழுவதும், விடியற்காலையில், தனிமையான இடத்தில், உயர்ந்த மலையின்மேல் பொழுது சாயும்வரை இறைவனுடன் உரையாடி அவருடைய திருவுளத்தை அறிந்தபிறகு  அவரது திருவுளத்தை வாழ்வில் செயலாற்றுகின்றார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை பெற்றுத் தரவும்  இறைஉறவு மிக அவசியம் என்பதை நமக்கு கற்பித்து தருகின்றார். இன்று எத்தனையோ மனித உள்ளங்கள் இறைவனுடன் உறவாட சமயம் இல்லமால் உலகப் போக்கின்படி தூய்மையான அருளின் வாழ்வை சுவைப்பதற்குப்பதில் இருளின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களது தூய்மை நிறைந்த வாழ்வை இழந்து கொண்டிருப்பதை காண்கின்றோம். எனவே இறைநம்பிக்கைக்கு  இறைஉறவு மிக அவசியம். இறைமகன் இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய தூய்மையான அன்பும், இடைவிடாது செபிக்க வேண்டும் என்ற நற்பண்புகளை தனது வாழ்வில் நமக்கு கற்றுத் தருகின்றார். கெத்சமனித் தோட்டத்தில் தனது சீடர்களிடம் கேட்பது, ஒருமணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்பாடதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்றும் மேலும் அமைதி கொண்டு நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறுகின்றார். வாழ்வு தரும் இறைவார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்று, இறைவனிடம் தூய்மையான உறவை வளர்க்க முயற்சி எடுப்போம்.

திருத்தூதர்பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் , எனக்கு வலுவூட்டுகிறவர் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்று தனது இறைநம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.(பிலி 4:13). விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாம் இறைவன்மேல் கொண்ட நம்பிக்கையால் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட தயங்கவில்லை. மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் யாவேயிரே என்ற மலையில் மகனைப் பலியிட துணிகின்றார். ஆபிரகாம் ஆண்டவருக்கு அஞ்சுவதால், அவருக்குப் பரிசாக ஆட்டுக்கிடாயைக் பலியிடும்படி கொடுக்கின்றார். இத்தகைய இறைநம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். திருப்பாடல் 27,10 இறைவசனம், என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்ற வாக்கு தாவீது அரசர் இறைவன்மேல் கொண்ட ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. திருப்பாடல் 23,4 இறைவசனம், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும் என்றும் பாடுகின்றார். இத்தகைய இறைநம்பிக்கை நம்மில் அனுதினம் வளரவேண்டும். இத்தகைய  இறைநம்பிக்கைதான் திருத்தூதர் பேதுருவிடமும் இருந்தது. ஆகையால்தான் அவர் இறைமகன் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து செல்கின்றார் ஆனால் அவர் இயேசுவின்மேல் ஆழமான நிலையான நம்பிக்கை வைப்பதற்குமுன்பு பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி கடலில் மூழ்கும்போது ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கத்துகின்றார்.  நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய் என்று இயேசு கூறி அவருடைய கையைப் பிடித்து மீட்கின்றார். நம்முடைய வாழ்க்கைப் பயணமாகிய சிறியப் படகை பலவிதமான புயல்கள், எதிர்காற்றுகள் போன்ற சமூக தீய சக்திகளின் சிக்கலில் அலைக்கழிக்கப்பட்டு மனம் கலங்கி பல வேளையில் தளர்ந்து காணலாம். அத்தகையோருக்கு இன்று இறைமகன் இயேசு தரும் வாழ்வு தரும் வார்த்தைதான் " "துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள் "  என்றும், நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் ஐயம் கொள்வது என்றும் கேட்கின்றார். மேலும் இயேசு தம்முடைய சீடர்களிடம் நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் கூறுகின்றார்.(யோவான் 14,1). முதலாவதாக நம்முடைய வாழ்வு ஆண்டவரில் ஒன்றிருத்திருக்க வேண்டும். இறைவன் நமக்கு கொடுத்த உயிருள்ள வார்த்தையின்படி  வாழ்க்கையை கட்டி எழுப்ப வேண்டும். அவருடன் ஒன்றித்து பயணித்தால் எந்தப் புயலும் நம்மை தாக்காது. எனவே இறைவன் நம்மோடு இணைந்திருப்பதுபோல நாமும் அவரோடு இணைந்திருக்க வேண்டும். திருத்தூதர் பவுல் தேர்ந்து கொண்ட வார்த்தையை ஆழமாக தியானித்து வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம்  கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாகக்கி கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். (பிலி 3:8) என்று திருத்தூதர் பவுலடிகளாரின் வார்த்தையை ஏற்று இறைநம்பிக்கையிலும் இறைஉறவிலும் வளர்வோம்.

நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆwகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா, தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய், நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.  ஏனெனில் உன் கடவுளாகிய  ஆண்டவர் நானே. எசாயா 43:2-3a

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு. தந்தையாம் இறைவன் இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே, அகரமும் னகரமும் நானே. தொடக்கமும் முடிவும் நானே என்று

கூறியவரிடம், அனைத்து கொடைகளும் நிறைந்தவராய் இருக்கின்றார் என்றுதானே பொருள். ஏன் நமக்கு கலக்கம், பயம், கவலை. நமது வானகத்தந்தை என்றும் நிறைவுள்ளவராய் இருக்கின்றவர். அவ்வாறு உள்ளதால்தான் அவரே முன்வந்து சாலமோன் அரசரிடம் உனக்கு  என்ன வரம்  வேண்டும் கேள் என்று கேட்கின்றார். அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடம் இன்று இறைவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் என்றால், நம்முடைய பதில் என்ன வாயிருக்கும். நல்ல படிப்பு பட்டம், சுகமான வாழ்க்கை, பணம், நல்ல பதவி, நல்ல வீடு, நல்ல சம்பளம், வாழ்ககையில் உயர்வு, குடும்ப வாழ்க்கையில் சந்தோசமும், சமாதானமும், கஷ்டமில்லாத எளிதான வாழ்க்கை, வேலை தளங்களில் பதவி உயர்வு போன்ற உலக சுகங்களின் ஆசைகளை முன் வைப்போம் மேலும் அவைகள் அனைத்தும் நம்முடைய அன்றாட வாழ்வின் தேவைகளைக் குறித்து மட்டும்தானே உள்ளது. ஆனால் இன்று திருவழிபாட்டில் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளின் வழியாக இறைவன்   நமக்கு  வேறு வகையான தேடலைத் தேட வேண்டும் என்று கற்பிக்கின்றார். சாலமோன் அரசருக்கு அனைத்து உரிமைகள் செல்வங்கள் இருந்தும் அவர் இறைவனிடம் கேட்டது,  அவருடைய மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான "ஞானம்" நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும் என்று கேட்கின்றார். சாலமோன் அரசரைப் போல் இன்றும் இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும்  இறைவனின் ஞானம் என்னும் வரத்தைக் கேட்டு நன்மை தீமை பகுத்தறிய உறுதுணையாக இருக்க ஆவியானவரின் துணை வேண்டுவோம்

நீதிமொழிகள் நூலில் இவ்வாறு காண்கின்றோம்  "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் ".மேலும்  "நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து. மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னெதென்பதை உணர்ந்து கொள்வாய், கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே. இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவருக்கும் ஞானம் என்னும் அருள் கொடை மிகவும் தேவையான ஒன்று. சில சமயத்தில் நன்மை எது,  தீமை எது,  உண்மை எது, பொய்  எது என்பதை நன்றாக அறிந்தும், அறியாத உலகத்தில் பயணிக்கின்றோம். இளய சமூதாயம் உலக நாட்டங்களுக்கு அடிமையாகி உண்மையான அருளை இழந்து தவிக்கின்றார்கள். ஆம் உண்மையான புதயலைத் தேடாமல், அழிவுக்குச் செல்லும் உலகப் புதயல்களை நோக்கி மனித உள்ளங்கள் ஏங்கி ஓடித் திறிந்து, இறுதியில் மன அமைதி இல்லாமல் படுகுழியில் விழுந்து கிடப்பதைக் காண்கின்றோம். இன்று எத்தனையோ உள்ளங்கள் மேலும் மேலும்  தவறான பாதையில் பயணித்து வாழ்வை இழந்த கொண்டிருக்கின்றார்கள். மனித வாழ்வுக்கு உண்மையான ஞானம் நிறைந்த புதையல் யார் என்று கேட்டால்,  அது இறைமகன் இயேசுவும், அவருடைய வாழ்வு தரும் வார்த்தை மட்டும் என்று கூறலாம். அவர் நேற்றும், இன்றும் ,என்றும் எப்பொழுதும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் ஆனால் அவரை ஒருசிலரால் மட்டும்தான் நன்றாக உணரமுடிகின்றது. கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும் என்று இறைமகன் இயேசு மொழிந்த வார்த்தையை நம்பி ஞானம் என்னும் அருள் கொடையைப் பெற்று உலகப் போக்கின்படி வாழாமல், இறைவனின் கட்டளைகளைக் கடைபிடித்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம். இறைவனை நம்புவோர்க்கு எல்லாமே நன்மையாக அமையும் என்பது உண்மை. இறையாட்சியின் புதயலைத் தேடுவதற்கு ஆவியானவர் எப்பொழுதும் உதவிடுவார். நாம் அனைவரும் இறைவனுக்கு உரியவர்கள் எனவே அவருடைய பாதையில் நடந்து செல்வதற்கு அவருடைய ஆசீரும் வழிநடத்தலும் மிக அவசியம். நாம் அனைவரும் இறைவனுடைய கைவேலைப்பாடு, நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப் படடிருக்கிறோம். அவரைப்போல் இறைஞானத்தில் வளர்வதற்கு தடையாய் உள்ள அனைனத்தையும் களைவோம். நற்செயல்கள் புரிவதற்கு இறைவனின் ஞானத்தை கேட்டு அதன்படி மிகச் சிறியவற்றில் கூட நமது நீதியும் நேர்மையும் வெளிப்படட்டும். இறைமகன் இயேசு கொடுத்திருக்கும் புதையலாகிய உயிருள்ள வார்த்தையைக் கையில் எடுப்போம். மனதில் பதிப்போம், ஆவியானவரின் துணையுடன் செயலில் இறங்குவோம்.

இனிப் பயணிக்கின்ற நாட்களில் உலக நாட்டுத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், குடும்பத்தலைவர்கள் அனைவரும் ஞானம் என்னும் அருள் கொடையைப் பெற்று நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்து மக்கள் அனைவரையும் நல்வழி நடத்திட அரசருக்கு அரசராக விளங்கும் அமைதியின் அரசரிடம் மன்றாடுவோம்.

ஆகவே, பொன்னிலும்  பசும் பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன், பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். திருப்பாடல் 119: 127-128

நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

பொதுக்காலம் 14ஆம் வாரம்.   இறைவாக்கினர் செக்கரியா துன்பத்தில் வாழும் இஸ்ரயேல் மக்களுக்கு கூறும் ஆறுதல் வார்த்தைகள், மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு, மகளே எருசலேம்! ஆர்ப்பரி. உங்களுக்கு இறைஆட்சியைப் பற்றி எடுத்துரைக்க எளிமையான அரசர் உங்களிடம் வருவார், அவர் நீதியுள்ளவர், வெற்றி வேந்தர், எளிமையுள்ளவர், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார், அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுகளின் எல்லைகள்வரை செல்லும்  என்று முன்கூட்டியே இறைமகன் இயேசுவைப்பற்றி எடுத்துரைக்கின்றார். இறைமகன் இயேசுவின் ஆட்சிக்கு முடிவே இராது. இறைவனுடைய வார்த்தை அனைவருக்கும் ஆறுதல் கொடுக்கும் உயிருள்ள வார்த்தையாகும். அரசருக்கெல்லாம் அரசராக விளங்கும் இறைவன்  வார்த்தையின் வடிவில் மனிதனாகப் பிறந்து, அவர் நம்மிடையே குடிகொண்டார். அவர் அரண்மனையிலோ, விடுதியிலோ, மாளிகையிலோ பிறக்க வில்லை. அவர் படைத்த மாட்சிமை நிறைந்த உலகத்தில, அவர் பிறப்பதற்கும் தங்குவதற்கும் இடமில்லை. எளிமையின் கோலத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,  ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து, வளர்ப்புத் தந்தையுடன் தச்சுத் தொழில்  செய்து, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், பாவிகளுக்கும் நண்பனாக வாழ்ந்து, மனிதகுலத்திற்கு நிலைவாழ்வு வழங்குவதற்கு தன்னையே பலியாக சிலுவை மரணத்திற்கு கையளித்தவர் தான் எளிமையான அரசர் இறைமகன் இயேசுகிறிஸ்து. நேற்றும், இன்றும், என்றும் வாழ்கின்றவர். தன்னுடைய இறையாட்சிப் பணியில் எதிர்கொண்ட அனைவரையும்  அன்போடும் கனிவோடும்  அனுகி  அனைவருடைய தேவைகளை நிறைவுசெய்து ஏழைகளின் உள்ளத்தில் எளிமையின் அரசராக அன்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றார்.  எளிமையின் அரசராக விளங்கும் நமது மெசியாவாகிய இறைமகன் இயேசு கிறிஸ்து, இரக்கமும் கனிவும் உடையவர், எளிதில் சினம் கொள்ளாதவர், பேரன்பு கொண்டவர், எல்லாருக்கும் நம்மை செய்பவர். வாழ்வு அளிப்பவர்.  அமைதி அளிக்கும் இறைவன் பாவிகளாகிய நமது வருகைக்கு என்றும் காத்திருப்பவர். எளிமையின் அரசரால் மட்டும்தான் உண்மையான இளைப்பாறுதலை நமக்குத் தரமுடியும். ஆண்டவராகிய நமது ஆயர் நம்மோடு இருக்கும் போது நமக்கு ஏதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்வார். வாழ்நாள் எல்லாம்  அவருடைய அருளும் நலமும் பேரன்பும் உண்டு என்று மொழிந்தவர்தான் எளிமையின் அரசர். அவர் எவ்வளவு சுவையுள்ளவர் என்று சுவைதத்துப் பார்க்க சமயம் வேண்டும்.

Read more: பொதுக்காலம் 14ஆம் வாரம்.

நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் "

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு. ஆண்டவரின் பேரன்பைப்பற்றி என்றும் பாடுவேன்.நீர் உண்மையுள்ளவர். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது. உமது உண்மை வானைப்போல் உறுதியானது. நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை என்று  இன்றைய பதிலுரைத்  திருப்பாடலில் பாடுகின்றோம். இறைவனின் அன்பின் ஆழத்தையும் உயரத்தையும் உணர்ந்த ஒருவரால்மட்டும் தான் இவ்வாறு இறைவனைப் பாடிப் புகழமுடியும். இறைவாக்கினர் எலியா எலிசாவை நோக்கி, உம்மிடம் எடுத்துக் கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்று கேட்டார். அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக என்றார்.(2 அரசர்கள்2:9-10). இறைவனின் ஆவியானவராய் அருள் பொழிவு செய்தவரால் மட்டும்தான் இறைவனின் செயலையும் ஆற்றலையும் செய்ய முடியும். இறைவாக்கினர் எலியாவின் ஆவியை இருமடங்காக கொடுக்க வேண்டுமென்று எலிசா செபிக்கின்றார். அவருடைய வேண்டுதலுக்கேற்ப இறைவாக்கினர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எலிசா கொடையாக எண்ணி அந்த போர்வையை எடுத்துக்கொணடார். அந்தப் போர்வையைக் கொண்டு   யோர்தான் நதியை அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிந்து எலிசா அக்கரைக்குச் செல்கின்றார். எலியாவின் வல்லமையைப் பெறுகின்றார். இருமடங்காக தான் பெற்றுக் கொண்ட ஆவியானவரின் கொடைகளினால்  வல்ல செயல்கள்  செய்து மக்களை வழிநடத்துகின்றார்.

Read more: பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு

திருச்சபை நிகழ்வுகள்

There are no events.

இறையிரக்கத்தின் ஆண்டு